புதுச்சேரி, டிசம்பர் 02:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சாலைவலத்துக்கான அனுமதியை மறுத்த நிலையில் இனி பின்னர் காலத்திலும் அனுமதி வழங்கக்கூடாது என புதுவை பேரவை தலைவர் செல்வம் வலியுறுத்தினார்.
புதுவை ஐ.ஜி. ஏ.கே. சிங்களாவை சந்தித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கடிதம் வழங்கியிருந்தார். இதன்பிறகு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் நேரடியாக சந்தித்து, விஜய் சாலைவலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஆனந்த் மனு அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து புதுவை பேரவை தலைவர் செல்வம், செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “கரூரில் மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. விஜய்யின் சாலைவலத்திற்கு அனுமதி மறுத்தது சரியான முடிவே. தமிழ்நாட்டைப் போன்ற பெரிய சாலை அமைப்பு புதுச்சேரியில் கிடையாது. இங்கு மிகக் குறுகிய சாலைகள் மட்டுமே உள்ளன.
தவெகவினர் அனுமதி கேட்டிருப்பது மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் பகுதி. சாலைவலத்தை தவிர்த்துவிட்டு பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம். சாலைவலத்தை தவிர்க்க வேண்டும் என்று தவெகவினருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இதுதொடர்பாக முதல்வரிடமும் வேண்டுகோள் வைத்துள்ளேன்.” எனத் தெரிவித்தார்.