சென்னை, நவம்பர் 28:
டிட்வா புயல் தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது. இலங்கை கடலோரத்தில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து நேற்று புயலாக மாறியது.
ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்று பெயரிடப்பட்ட இப்புயல் தற்போது 10 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. நவம்பர் 30 அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலில் கரையை அடையும்.
இதனால் தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா பகுதிகள், வடகடலோர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்றவற்றுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னை எழிலக கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மழை எச்சரிக்கைக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். தலைமைச் செயலர் தலைமையில் உயரதிகாரிகள் கூட்டம் நடைபெற்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.