டெல்லி, நவம்பர் 26:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்வதற்கு எதிராக பல மாநில அரசுகளும், அமைப்புகளும் தாக்கல் செய்துள்ள மனுக்களை வரும் டிசம்பர் 4ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மொத்தம் 12 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருவது தொடர்பாகவே இந்த வழக்குகள் எழுந்துள்ளன.
எஸ்ஐஆர் நடவடிக்கைகள் பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டின் பேரில், குறிப்பாக தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து உச்சநீதிமன்றத்தில் தனித் தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை கடந்த வாரம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் எஸ்.என்.வி. பாட்டீ மற்றும் ஜாய்மால்ய பாக்சி ஆகியோர் அமராக, மத்திய தேர்தல் ஆணையத்திடம் பதில் கோரியிருந்தது.
கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அங்கு டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் காலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடந்தால் நிர்வாகத் தடைகள், குழப்பங்கள் ஏற்படும் என்பதால், இந்த விவகாரத்தை அவசர வழக்காகக் கருதி முன்னுரிமையுடன் விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டிசம்பர் 4ஆம் தேதியும், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டிசம்பர் 9ஆம் தேதியும் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மற்றும் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி மற்றும் பிற தேர்தல் அட்டவணைகளுக்கு இடையிலான ஒத்திசைவு, அரசியல் மற்றும் நிர்வாக விளைவுகள் போன்ற பல அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றம் விரிவாக விசாரிக்க உள்ளது.