கரூர், நவம்பர் 25:
கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கில் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.
செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகரப் பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மேற்கண்ட தவெக நிர்வாகிகள் ஆஜராகினர். இரவு வரை நீடித்த விசாரணை சுமார் 10 மணிநேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 10.10 மணியளவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் ஆகியோரும் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினர். தற்போதும் அவர்கள் மீதான விசாரணை தொடர்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், நெரிசல் சம்பவம் நடந்தபோது அங்கு இருந்த 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்திருந்தனர். அதேபோல் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குருசரணிடமும் விசாரணை நடைபெற்றது. மேலும் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.