சென்னை, நவம்பர் 11:
தமிழகத்தில் கோவில்களிடமிருந்து காவலர் குடியிருப்புகள் வரை பாதுகாப்பற்ற நிலைமை தொடர்ந்துவருவதால் பொதுமக்களின் உயிர்விழப்பின் அபாயம் அதிகரித்து வருகிறது என்று முன்னாள் முதல்வர் மற்றும் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
“காவல்துறையையும், அவற்றின் சுதந்திரமான செயல்பாட்டையும் திமுக அரசு தடுக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மக்கள் உயிரோடு சுதந்திரமாக வாழ முடியாமல் உள்ளனர்,” என பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இணையதளப்பதிவில் தெரிவித்து இருப்பதாவது, ராஜபாளையத்தில் கோவில் காவலாளிகள் 2 பேரை கொலை செய்துவிட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவத்தை குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோவில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது? பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்-அமைச்சரே முழு பொறுப்பு.
ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க திமுக திராவிட மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.