ஹரியானா, நவம்பர் 10:
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் உயரிய தேசிய விருதைப் பெற்றுள்ளது. மத்திய நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற ‘நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது’ வழங்கும் விழா ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் நடைபெற்றது.
நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து சேவையை வழங்கும் நகரம் என்ற பிரிவில் இந்த ஆண்டு சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கே விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் விருதை வழங்கினார், அதை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதை பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மாநகர போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் பிரபு சங்கரும் கலந்து கொண்டார்.
சென்னையில் பொது போக்குவரத்து துறையின் செயல்திறன், அணுகல் எளிமை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற அம்சங்களை மேம்படுத்த பல கட்டமைப்பு முயற்சிகளும் புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டதற்காகவே இந்த விருது வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் நகர்ப்புற போக்குவரத்துத் துறையில் சிறந்த செயல்திறனுக்கான விருதும் பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளது. இதற்கான விருதுகளையும் அமைச்சர் சிவசங்கர் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் தனது இணைய தளப் பதிவில், “திராவிட மாடல் அரசின் ‘விடியல் பயணம்’, சென்னை மாநகர பள்ளிகளுக்கான பிரத்யேக பேருந்து வசதி, ‘சென்னை ஒன்’ (Chennai One) செயலி, ஒருங்கிணைந்த டிக்கெட் திட்டம் போன்ற புதுமையான முயற்சிகள், இந்தியா முழுவதற்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.