சென்னை, நவம்பர் 06:
தமிழக மூத்த அமைச்சர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துகொண்ட பொதுக் கூட்ட ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு தெரிவித்திருப்பதாவது: “அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்கவில்லை என்பது ஏன்? முதலமைச்சரின் தலைமையில் தான் இந்த கூட்டம் நடைபெற வேண்டும் என்பதே சரியானது. அதிமுக ஆட்சியிலும் மற்ற கட்சிகளுக்கு விருப்பமின்றி வெறுப்பின்றி கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் தொகுதி மாறுபாடு காரணமாக கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்ட விதிகள் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே விதமாக அமைய வேண்டும்.
பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை என்பதால், அதை எந்த காலத்திலும் தடை செய்யக்கூடாது. அனைவருக்கும் சமமாக சீரான விதிகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.”