டெல்லி, நவம்பர் 04:
அதிமுக உள்கட்சி பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இரட்டை இலை சின்ன விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தற்போது உண்மையான அதிமுக அல்ல என்றும், கட்சியின் சட்டபூர்வமான நிலையை நிரூபிக்க தமக்கு கால அவகாசம் வழங்க வேண்டுமென்றும் கோரியுள்ளார். மேலும், தற்போது தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தை விரைவாக விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் செங்கோட்டையனை நீக்கியது கட்சிக்குள் பெரிய அதிர்வலை உருவாக்கியது. கடந்த ஒன்றரைக் காலமாக எடப்பாடி பழனிசாமி-செங்கோட்டையன் இடையே ஏற்பட்டிருந்த பனிப்போர் இதனால் வெளிப்படையாகி விட்டது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கட்சி மற்றும் பொதுக் கூட்டங்களில் செங்கோட்டையன் தொடர்ந்து புறக்கணித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை இலை சின்னம் அதிமுகவின் அடையாளமாக கடந்த பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. 2017ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்ட பிரிவினைச் சூழலில் இதே சின்னத்தைப் பற்றிய உரிமைப்போர் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் வரை சென்றது. அதே போல் தற்போது மீண்டும் சின்ன உரிமை விவகாரம் உயிர்த்தெழ, செங்கோட்டையனின் கடிதம் புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் மேலும் தீவிரமாவதா அல்லது சமரசம் நோக்கி நகருமா என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் கேள்வியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அதிமுகவின் எதிர்கால அமைப்பில் முக்கிய பங்காக பார்க்கப்படுகிறது.