கோயம்புத்தூர், நவம்பர் 03:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக கருத்து வெளியிட்டதன் பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக தலைமையின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்டமைப்பு பிரச்சினையைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அனைத்து கட்சிப் பொறுப்புகளும் நீக்கப்பட்டன. இதற்கு முன் அவர் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். அந்த சந்திப்பு கட்சியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது நீக்கம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று கோவை விமான நிலையம் வந்த அவர் நிருபர்களுடன் பேசியபோது, “எம்.ஜி.ஆர். காலம் முதல் நான் ஒரே நிலைப்பாட்டுடனும், அதிமுக வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் பணியாற்றி வருகிறேன். குடும்ப அரசியல் தி.மு.க.வில் மட்டுமல்ல, அதிமுகவிலும் இடம்பெற்றுவருகிறது. எடப்பாடி பழனிசாமியின் மகன், மாப்பிள்ளை, மைத்துனரின் தலையீடு இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்,” என்றார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: “நான் இந்த இயக்கம் வலுப்பெற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பணியாற்றி வருகிறேன். ஆனால் சிலர் ‘என்னால் மட்டுமே கட்சி நிலைநிறுத்தப்படும்’ என்று தவறாக எண்ணிக் கொள்ளக் கூடாது. தன்னைச் சுயமாக ஏமாற்றிக் கொள்ளுவது மட்டுமல்ல, மற்றவர்களையும் ஏமாற்றுவது தவறு,” என செங்கோட்டையன் வலியுறுத்தினார்.
செங்கோட்டையனின் இந்த கருத்துகள் அதிமுக உள்கட்டமைப்பில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.