வேலூர், நவம்பர் 3:
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மற்றும் நாளை இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு வருகை தருகிறார்.
துணை முதலமைச்சர் இன்று காலை 10 மணிக்கு சென்னை இருந்து புறப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் வருகிறார். அங்கு 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது கட்டப்பட்டு, காங்கிரஸ் தலைவராகிய காமராஜர் தங்கியிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
பின்னர், ராணிப்பேட்டை–அம்மூர் சாலையில் உள்ள சமத்துவபுரம் எதிரே அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட வழங்கல் விழாவில் கலந்து கொண்டு, 23 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அளிக்கிறார். இதன்போதே பல புதிய அரசு கட்டிடங்களையும் திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.
அத்துடன், ஜி.கே. உலக பள்ளியில் புதிய இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கம், ஆற்காட்டில் திமுக இளைஞரணி சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றையும் திறந்து வைக்கிறார். பின்னர், ஆற்காடு இந்திராணி ஜானகிராமன் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.
இதற்கு அடுத்ததாக, மாலை 3 மணிக்கு வேலூர் மாவட்டத்துக்கு வரும் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகளின் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மாலை 6 மணிக்கு காட்பாடி வட்டம் சேவூரில் நடைபெறும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
நாளை காலை 10 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார். பின்னர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய ஸ்கேன் கருவியை திறந்து வைக்கிறார். அதன்பின், ஸ்ரீநாராயணி மஹாலில் நடைபெறும் அணைக்கட்டு தொகுதிக்கான திமுக முகவர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.