சென்னை, அக்டோபர் 30:
விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக நீதி போராளி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா, இந்த ஆண்டும் ஆன்மிக மற்றும் அரசியல் நிகழ்வுகளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் மற்றும் பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று அரசு விழாவாக தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெற்றது.
இதையொட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதே நேரத்தில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பனையூரில் அமைந்துள்ள கழக அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.