பாட்னா, அக்டோபர் 23:
இந்த ஆண்டு வரவிருக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் மற்றும் துணை முதல்வர் வேட்பாளராக விஐபி கட்சித் தலைவர் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் இந்தியா கூட்டணியின் பேச்சுவார்த்தை ஒருங்கிணைப்பாளரான அசோக் கெலாட் பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
இந்தியா கூட்டணியின் கீழ் மகாகத்பந்தன் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக சில நாட்களாக இழுபறி நிலவி வந்தது. சில தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்ததையடுத்து, நிலவரம் சிக்கலாக மாறியது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அசோக் கெலாட் மற்றும் கிருஷ்ணா அல்லவாரு ஆகியோர் தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த விவாதங்களுக்குப் பிறகு உடன்பாடு எட்டப்பட்டு, இன்று கூட்டணியின் ஒருங்கிணைந்த நிர்வாக அணியை அறிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறியதாவது, தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும், விஐபி கட்சித் தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்படுகிறார்கள். மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையில் நடந்தது போலவே, பீகாரிலும் அரசியல் தெளிவின்மை நிலவுகிறது. ஆகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித் ஷா தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
பின்னர் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி யாதவ் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, எங்களுடைய நோக்கம் ஆட்சியைப் பிடிப்பதல்ல, பீகாரை மாற்றுவதே. 20 ஆண்டுகளாக நீடித்து வரும் ஆட்சியை நாம் ஒன்றிணைந்து மாற்றி நிரந்தர வளர்ச்சியை உருவாக்குவோம். நிதீஷ் குமார் தலைமையிலான அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறியுள்ளது. பாஜக தற்போது அவருக்கு அநீதி செய்கிறது. அவர்கள் நிதீஷ் குமாரை முதல்வராக்க மாட்டார்கள் என்று தொடக்கம் முதலே நாங்கள் கூறி வந்தோம் என்றார்.
மேலும், தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தள அரசியல் மேடையிலிருந்து மறைந்து போகும். மக்களின் விருப்பம் மாற்றத்திற்கு. அதற்காக இந்தியா கூட்டணி ஒன்று திரண்டு உழைக்கும் என தேஜஸ்வி உறுதியளித்தார்.
இந்த அறிவிப்பினால் பீகார் அரசியலின் முக்கிய திருப்பம் உருவாகியுள்ளது. நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் மோதும் வகையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் பிரச்சாரத்தை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.