சென்னை, அக்டோபர் 17:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் “எதிர்கால மருத்துவம் 2.0” இரண்டாவது பன்னாட்டு மருத்துவ மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணைவேந்தர் நாராயணசாமி எழுதிய “நவீன மருத்துவ முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு” என்ற நூலை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார், துணைவேந்தர் நாராயணசாமி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பன்னாட்டு மருத்துவ பேராசிரியர்கள் ரெபெக்கா மில்லர், கபிலன் தர்மராஜன், நாகலிங்கம் வர்ணகுலேந்தரன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு கருத்தரங்க உரைகளை வழங்கினர்.
மாநாடு மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில், நவீன மருத்துவ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, நோய் கண்டறிதல், சிகிச்சை முறைகளில் புதுமையான ஆராய்ச்சிகள் குறித்து ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.
மாநாடு மூலம் உலகளாவிய அளவில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றம் அடையுமென அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.