சென்னை, அக்டோபர் 17:
அதிமுக தொடங்கிய நாள் நினைவாக, இன்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பழனிசாமி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் வரலாற்றை நினைவூட்டும் வகையில் தலைமையக வளாகம் முழுவதும் கொடிகள் மற்றும் பதாகைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மக்கள் இயக்கம் மட்டும் அல்ல, அது ஒரு உணர்வு. தமிழ்நாட்டுக்கு, தமிழக மக்களுக்கு பிரச்னை என்றால், அதற்கான முதல் குரல் கொடுப்பவன் அதிமுக தொண்டன் தான்.
நம் தமிழக மக்களுக்கான குரலாக, நாளை மக்களுக்கான ஆட்சியை அமைக்கப் போகிறோம் என்ற பொறுப்போடு, மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க வேண்டிய பெரும் கடமை நமக்கு இருக்கிறது என்ற அர்ப்பணிப்போடு, எழுச்சிப் பயணங்களில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள் அளித்த உத்வேகத்தோடு, கழகக் கண்மணிகளே- வாருங்கள்!
மக்களை வதைக்கும் இந்த விடியா அரசை வீழ்த்துவோம், தமிழகத்தை மீட்கும் லட்சியதோடு, அம்மா கண்ட நூற்றாண்டு கனவு நோக்கி பீடுநடை போடுவோம்! நாளை நமதே!” எனத் தெரிவித்துள்ளார்.