தமிழ்நாடு, அக்டோபர் 14:
பண்டிகை காலத்தில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தையும், கடந்த ஆறு நாளாக தென்மண்டல மாநிலங்களில் நடைபெற்ற எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தையும், தற்போது திரும்பப் பெறப்பட்டது என தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய இந்த போராட்டம், எண்ணெய் நிறுவனங்களின் டேங்கர் லாரி ஒப்பந்தத்தில் ஒப்புதல் அளிக்கப்படாத 700 லாரிகளுக்கான வேலை வாய்ப்பு கோரிக்கையினால் ஏற்பட்டது.
2025 அக்டோபர் முதல் 2026 பிப்ரவரி வரை செல்லும் இந்த ஒப்பந்தத்தில் 3,500 லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு, 2,800 லாரிகளுக்கே மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி கடிதம் வழங்கியுள்ளன.
எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம், அக்டோபர் 2025 முதல் 2026 பிப்ரவரி வரை கையெழுத்திடப்பட்டிருந்தது. ஆனால், பெரும் தொகையை முதலீடு செய்து, டேங்கர் லாரிகளை வாங்கியிருப்பதாகவும், இதனை வேறு பணிகளுக்குப் பயன்படுத்த முடியாது என்பதால், ஓராண்டுக்கு ஒப்பந்தத்தை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
டேங்கர் லாரிகளின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில், தற்காலிகமாக 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒப்பந்தத்தை நீட்டிக்க பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்படுவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் இடைப்பட்ட காலத்தில் எந்த வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.