இடுக்கி, அக்டோபர் 13:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட காவல்துறையின் தகவலின்படி, முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக மின்னஞ்சல் வந்தது. இதன்படியாக பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த மின்னஞ்சல் திரிசூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிடைத்ததையும், உடனடியாக போலீசாரும் வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் அணி அமைத்து, அணைப் பகுதிகளை முழுமையாக பரிசோதித்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், தீவிர சோதனைக்குப் பிறகும், அணையில் சந்தேகத்துக்கு இடமான எந்தப் பொருளும் கிடைக்கப்பெறாத நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்துள்ளது. எனினும், அணைப் பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1895ஆம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, தமிழ்நாடு – கேரளம் என இரு மாநிலங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அதே வேளையில், அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாட்டுக்கும், அது அமைந்திருக்கும் கேரளத்துக்கும் இடையே சில மோதல்களுக்கும் காரணமாக உள்ளது.