சென்னை, அக்டோபர் 07:
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், மக்கள் மனதில் எண்ணற்ற வேதனைகளை உருவாக்கியுள்ளது.
இந்த நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை காணொலி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருந்து 106 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், பலியானோரின் வீடுகளுக்கு தவெக மாவட்ட நிர்வாகிகள் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பின்னர், தவெக நிர்வாகியின் செல்போனுக்கு தொடர்புகொண்ட விஜய், காணொலிவழியாக பேசினார்.
அப்போது, ”உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட ஒருவரின் இழப்பு என் மனதை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. இப்போது சட்ட திட்டங்கள் எனக்கு எதிராக இருப்பதால் உங்களை நேரில் வந்து சந்திக்க முடியவில்லை. விரைவில் உங்களை வந்து சந்திப்பேன், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து எப்போதும் உங்களுக்கு உதவி செய்பவனாக இருப்பேன்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த நெரிசலில் பலியான தனுஷ் குமாரின் தாய் உமா மகேஸ்வரி மற்றும் அவரது சகோதரி ஹர்ஷினி ஆகியோரிடமும் காணொலிவழியாக விஜய் பேசியுள்ளார்.
மேலும், பிரசாரக் கூட்டத்தில் பலியான 25 -க்கும் மேற்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிய விஜய், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.