திருவள்ளூர், செப்டம்பர் 20:
செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
ஏற்கனவே, செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் 1180 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துடன், ரூ.68.78 கோடி மதிப்பில் மேலும் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வசதியை உருவாக்கி செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட பூந்தமல்லி அருகே அமைந்துள்ள செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் தொடங்கி வைத்து, 530 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட அந்த நிலையின் செயல்பாட்டையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும், குடிநீர் வழங்கல் துறையின் கடமைகளை மேம்படுத்தும் வகையில் குடிநீர் மொபைல் செயலியை முதல்வர் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் மூலம் குடிநீர் வழங்கும் குறைபாடுகளை பொதுமக்கள் எளிதில் புகார் செய்ய இயலும்.
இந்த திட்டத்தில், மடிப்பாக்கம், வளசரவாக்கம், உத்தண்டி, துரைப்பாக்கம், புழல், நெற்குன்றம், செம்மஞ்சேரி, மாதவரம், இடையன் சாவடி, கோடம்பாக்கம், ராமாபுரம், சடையன் குப்பம், சூரப்பட்டு, ஜல்லடியான்பேட்டை, புத்தகம், மாத்தூர், கதிர்வேடு, நீலாங்கரை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16.40 லட்சம் பேர் புதிய குடிநீர் வசதியை பயன் படுத்துவார்கள்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலம் மற்றும் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் பலர் உடனிருந்தனர்.