தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கடந்த 13-ஆம் தேதி திருச்சி மரக்கடை M.G.R சிலை பகுதியில் இருந்து தொடங்கியுள்ளார். இந்த பிரசாரம் பொதுவாக சனிக்கிழமை நாட்களில் நடைபெற உள்ளது.
நாளை, பிரசாரத்தின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் விஜய் நாகையில் மேற்கொள்வார். அதற்காக கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் ஆகிய 7 இடங்களில் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
முதலில், புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய மாவட்ட காவல் துறை அனுமதி வழங்கியிருந்தாலும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், தொண்டர்கள் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் செய்யக்கூடாது என்ற பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாகப்பட்டினத்தில் பிரசார இடம் மாற்றப்பட்டது. த.வெ.க.வினரின் கோரிக்கையின்படி, புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தூர் அண்ணா சிலைக்கு விஜய் மதியம் 12.30 மணிக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.