டெல்லி, செப்டம்பர் 15:
மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக, விடுதலைச்சிறுத்தைகள், தவெக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் சார்பாக 72 ரிட் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
முன்பு நடைபெற்ற விசாரணையில், வக்பு சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்குமாறு மனுக்கள் முன்வைக்கப்பட்டன. தி.மு.க. சார்பில் வக்கீல் பி.வில்சன், பொதுச்சுகாதாரம் மற்றும் பொது ஒழுங்கு பாதிக்கப்படும் விளைவுகளில் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து 38 கூட்டங்களை நடத்தி 98.2 லட்சம் கோரிக்கை மனுக்களை பரிசீலித்தது. அதன்பிறகே நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது, வக்பு திருத்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முழுமையாக தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட குடிமக்கள் உரிமைகளைப் பற்றி ஆட்சியர்களை முடிவெடுக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆனால், வக்பு நிலம் ஒதுக்கீடு தொடர்பான ஆட்சியருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் இடைக்கால தடை உத்தரவிட்டனர்.
மேலும், வக்பு சொத்துகளை வழங்கும் நபர்கள் பத்து ஆண்டு அல்லாமல் குறைந்தது ஐந்து ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டியிருப்பதாக சட்டத்தில் முன் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மத்திய வக்பு வாரியத்தில் 4 இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களுக்கும், மாநில வக்பு வாரியத்தில் 3 இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களுக்கும் மேலாக இருக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவு வெளியிட்டனர்.