சென்னை, செப்டம்பர் 15 :
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து, அவர் பேசியதாவது: “பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தொண்டர்கள் மற்றும் மக்களின் மனநிலைகளை உணர்ந்து அதற்கேற்ற முறையில் செயல்பட வேண்டும். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி, சட்டங்களை உருவாக்கி வழங்கியவர். தற்போது அந்த சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. அதனால் 6 வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.”
“அதிமுக ஒன்றிணைய வேண்டும். தலைவர்கள் இணையவில்லை என்றால், தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள். நானும் செங்கோட்டையனும் தொலைபேசியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். சந்திப்பு வாய்ப்பும் உள்ளது” என்று பன்னீர் செல்வம் கூறினார்.
மேலும், “தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. எதுவும் நடக்கலாம். அரசியலுக்கு வருவோர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தாரக மந்திர முறைப்படி செயல்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.