சென்னை, செப்டம்பர் 12:
தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளருக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வரும் அந்த ஜவுளிக்கடையின் உரிமையாளர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்ததையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்படுகின்றது. சென்னையில் அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் அடங்கிய 20க்கும் மேலான இடங்களில் 40 வாகனங்கள் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று முழு சோதனையில் ஈடுபட்டனர்.
பொதுவாக காவல்துறை அல்லது துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனை நடைபெறும் நிலையில், இந்த சோதனையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சோதனை நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதற்கு முன் கடந்த வாரம் சென்னை வடபழனி, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றுள்ளன. அதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தியது குறிப்பிடதக்கது.