மதுரை, செப்டம்பர் 11:
இமானுவேல் சேகரன் நினைவு நாளில் பங்கேற்க, சென்னை விமானம் மூலம் மதுரை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் பல முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு பற்றி சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கோட்பாடு என்னவோ அப்படித்தான் பா.ஜ.க. இயங்கும். ஆர்.எஸ்.எஸ்.ல் பயிற்சி எடுத்தவர்கள் அந்த சித்தாந்தப்படி தான் இயங்குவார்கள். நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்லிவிட போகிறார்களா? அவர்கள் வைத்திருக்கும் கொள்கையை கடைப்பிடிப்பார்கள். தெரியாத வடமாநிலத்தவரை தவிர இவர் தெரிந்தவராக இருக்கிறார். இதை தவிர இதில் பேச எதுவும் இல்லை.
மரபுப்படி அந்த இடத்திற்கு வருவதற்காக அவருக்கு வாழ்த்துகள். பா.ஜ.க.வின் கொள்கைகளுடன் ஒத்துபோய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திமுக தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர்தான். அதற்கு பிரதிநிதியாக போய் உலக நாடுகளில் பேசியது கனிமொழிதான். குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து பேசுகிறார்கள். இவர்களிடம் உறுதித்தன்மை என்ன இருக்கிறது.
குஜராத் கலவரத்தை திமுக கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசினார்கள். ஆனால் அதே கட்சியால் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து போராடினார்கள். அப்போது கூட்டணியில் இருந்ததால் ஆதரித்தீர்கள், இப்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்த்தீர்கள். உங்களுக்கு ஒரு நிலைப்பாடு இல்லை. எல்லா வழியிலும் நட்போடு இருப்பது நீங்கள் தான்.
மேலும், ஆடு மற்றும் மாடுகளைத் தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு மாநாடுகள் நடைபெறும் என்பதை தெரிவித்தார். மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் அரசியலை விரிவுசெய்யும் நோக்கமோடு செயல்படுவோம் என்றும் சீமான் கூறினார்.