சென்னை, செப்டம்பர் 08:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 80 ஆயிரத்தை கடந்துள்ளது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று காலை தங்கம் விலை சிறிது சரிந்திருந்தாலும், மாலையில் மீண்டும் உயர்வை கண்டுள்ளது.
காலையில் தங்கம் விலை, ஒரு கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.9,970 ஆக இருந்த நிலையில், மாலையில் மீண்டும் 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 10,060 ரூபாயாக விற்கப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 80,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தோடு போட்டியிட்டு வெள்ளியும் அதிகரிப்பைக் காண்கிறது. இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.137 விற்கப்பட்டது. பிற்பகலில் ரூ.3 உயர்ந்து, 140 ரூபாயாகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,40,000 வரையும் உயர்வு பெற்றுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வரி உயர்வு உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாகத் தங்க மதிப்பீட்டாளர்கள் கூறியுள்ளனர். இனிவரும் நாள்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.