டெல்லி, ஆகஸ்ட் 19:
பாஜகவினர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியின் வேட்பாளராக நிறுத்தினால் அவர்களுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை என்று அர்த்தமல்ல என திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணியினர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை வேட்பாளராக போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில் தமிழக எம்.பி.யான கனிமொழி கூறியதாவது, பாஜக அரசியல் பிரிவினைவாதமானது; தமிழ்நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் உரிய மரியாதை இன்றி, ஹிந்தியை வலுப்படுத்தி, தமிழ் மொழியையும் வரலாறையும் மாற்ற முயற்சி செய்கிறது. அதற்கு எதிராக, இந்தியா கூட்டணி ஜனநாயகத்தையும், நாட்டின் மக்களையும் மதிக்கும் ஒருவர் என்ற முறையில் சுதர்ஷன் ரெட்டியை வேட்பாளராக தேர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “இது ஒரு சித்தாந்த ரீதியான போராட்டம். ஹிந்துத்துவா, ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வரும் பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக முன்வந்து ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்திருக்கிறார்கள். பாஜகவினர் பிரிவினைவாத அரசியலை செய்கிறார்கள். அதை நாங்கள் எதிர்க்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.