சென்னை, ஆகஸ்ட் 16:
அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் அவர் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.
பணமோசடி வழக்கின் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஐ.பெரியசாமியின் சென்னை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் உள்ள வீடுகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீடு, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதி உள்ளிட்ட இடங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள துரைராஜ் நகரில் உள்ள வீடு, சிலப்பாடியில் உள்ள பழனி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜ.பி. செந்தில்குமார் வீட்டிலும் அதிகாலை முதல் சோதனை நடைபெற்றுள்ளது. பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதிகாலை முதல் ஐ.பெரியசாமி மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புடைய நபர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.