ஆண்டிபட்டி, ஆகஸ்ட் 02:
முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிறப்பு மருத்துவ முகாம்களில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில் திமுக எம்.பி, எம்.எல்.ஏ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், எஸ்.பி. சினேகாபிரியா, மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமின் வரவேற்பு பேனரில் தன் படம் இடம்பெறவில்லை என்று தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. அதிருப்தியுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மருத்துவ அடையாள அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கும் நேரத்தில், கலெக்டர் முன்னிலையில், மகாராஜன் எம்.எல்.ஏ. அட்டைகளை வழங்கியபோது, தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. தாம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனால் இருவரும் மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேடையில் இருவரும் தரக்குறைவான வார்த்தைகளும் பரிமாறப்பட்டதால், நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றும், தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. நிகழ்ச்சியின் நடுவே மேடையிலிருந்து வெளியேறி, விழாவை புறக்கணித்தார். விழாவில் பாராளுமன்ற உறுப்பினருக்குக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி அவர் திடீரென வெளியேறினார். இதனால் முகாமுக்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.