சென்னை, ஆகஸ்ட் 02:
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், இனிமேல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரையும் “நோயாளிகள்” என்று அழைக்காமல், “மருத்துவப் பயனாளிகள்” என்று அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்; உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும்” என்றும், மக்கள் நல பணிகள் செய்வதே தன் விருப்பம் என்றும் முதல்வர் தெரிவித்தார். திராவிட அரசின் இரண்டு கண்கள் கல்வியும் மருத்துவமும் என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தமிழக அரசு இந்த இரண்டு துறைகளிலும் பல்வேறு நவீன திட்டங்களை கொண்டு வருகிறது என்றார்.
மேலும் இத்திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவதும் 1,256 இடங்களில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூய்மை மற்றும் உயர் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் சோதனை செய்யப்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனிப்பட்ட மருத்துவ அறிக்கை கோப்பாக வழங்கப்படும். எந்த மருத்துவமனைக்கும் செல்லும் போது அந்தக் கோப்பை கொண்டு செல்லலாம் என்று முதல்வர் அறிவித்தார். முகாமில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் மருத்துவப் பணியாளர்களால் பணிவோடும் மறப்போடும் நடத்தப்பட வேண்டும் என்றார். தமிழ்நாடு எப்போதும் எல்லா துறைகளிலும் முதல் இடம் பிடித்து வருகிறது; அதேபோல மருத்துவ சேவையிலும் தமிழகமே நாட்டில் நம்பர் ஒன் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.