சென்னை, ஆகஸ்ட் 01:
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை கட்சித் தொடர் விளம்பரமாக பயன்படுத்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கின் தீர்ப்பு குறித்து கூறியதாவது,
மக்கள் திட்டமா, கட்சி விளம்பரமா? நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்! தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கட்சி விளம்பர பாணியில் “ஸ்டாலின்” பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியதன் மூலம், மக்கள் பணத்தில் திமுக அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அஇஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. சி.வி. சண்முகம் அவர்கள் தொடர்ந்த இவ்வழக்கில் கிடைத்த இந்தத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது.
மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் நலத்திட்டங்களில் எல்லாம் “ஸ்டாலின்” என்று தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அரசு திட்டங்கள் மக்கள் நலனை மேம்படுத்துவதற்குதானே தவிர, சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை இனியாவது உணரவேண்டும்.
மேலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பொதுமக்கள் வரிப்பணத்தில் இயங்கும் திட்டங்களுக்கு “உங்களுடன் ஸ்டாலின்”, “நலம் காக்கும் ஸ்டாலின்” என்று விளம்பர அரசியலை மனதில் வைத்து சூட்டிய பெயரை உடனடியாக நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கி நீக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.