சென்னை, ஜூலை 31:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 2021-ஆம் ஆண்டில் துவங்கிய திராவிட மாடல் அரசின் “எல்லாருக்கும் எல்லாம்” என்ற விடுதலை நோக்குடன் அரசு பல்துறை முன்னேற்றங்களை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறையில் ஒரு புதிய திட்டத்தை தொடங்கவுள்ளது. இதன் மூலம் தமிழக மக்களுக்கு உயர் தர மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” எனும் மருத்துவ முகாம்களின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும், மொத்தம் 1,256 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவை குறிப்பாக குறைந்த வளர்ச்சி பெற்ற ஊரகங்கள், குடிசை பகுதிகள், பழங்குடியினர் வசிக்கும் மண்டலங்களில் முன்னுரிமை கேட்டு நடத்தப்படுகின்றன.
இந்த முகாம்களில் 40 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோயாளிகள், மனநலம் பாதித்தோர், இதய நோயாளிகள், கர்ப்பிணிதாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு முதன்மை வழங்கப்படுகிறது.
முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளன. இவை தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் வளாகங்களில், பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
முகாமுகளில் ரத்த அழுத்த பரிசோதனை, இரத்த மாதிரிகள் சேகரிப்பு, ரத்த அணுக்கள், சர்க்கரை அளவு, சிறுநீரகம் செயல்பாடு போன்ற பரிசோதனைகள் நடைபெறும். மேலும் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளன. எக்ஸ்-ரே, எக்கோகார்டியோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் கர்ப்பப்பை வாய்ப்புற்று மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிதலும் இம்முகாம்களில் நடத்தப்படும்.
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, இருதயவியல், எலும்பியல், நரம்பியல், தோல், மகப்பேறு, இயன்முறை, மனநலம், நுரையீரல், நீரிழிவு மற்றும் கதிரியக்கவியலைக் கொண்ட மருத்துவ ஆலோசனைகளும் சிறப்பு நிபுணர்களால் வழங்கப்பட உள்ளன. அதேபோல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இம்முகாம்களின் தரவு முழுமையாக கண்காணிக்கப்பட்டு, தொடர்ச்சியான பின்தொடர்பு மருத்துவ சேவைகளுக்கு வழிவகுக்கப்பட உள்ளது.