சென்னை, ஜூலை 29:
இன்றைய தினம் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட (OBC) சமூகங்களுக்கு மருத்துவ படிப்புகளில் 27% இடஒதுக்கீடு வழங்கும் போராட்டத்தில் நீதியை வென்ற நாள் என்பதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதியின் மேல் அவர் கொண்ட உறுதியையும், எதிர்கால போராட்டத்தையும் சமூகத்தினருக்கு தெரிவித்தார்.
இன்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: 20,088 இடங்கள் = பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு! சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது – இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்!
சமூகநீதிக்கான இந்த அரசியலையும் – போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்! என்று கூறினார்.