டாக்கா, ஜூலை 21:
வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப்-7 பிஜிஐ போர் விமானம் ஒரு பள்ளி வளாகத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.03 மணியளவில், தலைநகரான டாக்காவிற்கு வடக்கே உள்ள உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நடந்தது. விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென விழுந்து நொறுங்கியதில், விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்து பள்ளி வளாகத்தில் ஏற்பட்டதனால், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பலர் தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த போர் விமானம் வங்கதேச விமானப்படைக்குச் சொந்தமானது என தகவல்கள் வெளியாகி உள்ளன. விபத்து முழு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, காரணங்கள் கண்காணிக்கப்படும் நிலையில், இந்த துயர சம்பவம் வங்கதேச மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.