சென்னை, ஜூலை 21:
சென்னை விமான நிலையத்தில், பயணிகள் வசதிக்காக, ப்ரீபெய்ட் டாக்ஸிகள், ஆன்லைன் புக்கிங் வசதியை தொடங்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், ஆன்லைன் புக்கிங் செய்து கூடுதல் கட்டணம் இல்லாமல், சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேரலாம்
விமான பயணிகள் வசதிக்காக, இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்படுவதாக, ப்ரீபெய்ட் டாக்ஸி யூனியன் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில், விமானங்களில் வந்து இறங்கும் பயணிகள், வீடுகளுக்கு அல்லது அவர்கள் தங்க வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கு, பெரும்பாலும் வாடகை கார்களையே பயன்படுத்துகின்றனர். பயணிகள் பெரும்பாலும் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்படும் ப்ரீபெய்ட் டாக்ஸிகளையே பயன்படுத்த விரும்புகின்றனர். சென்னை விமான நிலையத்தில் 300 -க்கும் மேற்பட்ட, ப்ரீபெய்ட் டாக்ஸிகள், இயக்கப்படுகின்றன. அந்தப் ப்ரீபெய்ட் டாக்ஸிகள், விமான நிலைய ஆணைய அங்கீகாரத்துடன், அரசு வகுத்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, கட்டணங்கள் வசூலித்து செயல்படுகிறது. கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது போன்ற புகார்கள், அதிகமாக ஏற்படுவதும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்படும், இந்த ப்ரீபெய்ட் டாக்ஸிகளை, பயணிகள் முன்பதிவு செய்வதற்கு, இணையதள வசதி இல்லாமல் இருக்கிறது. எனவே பயணிகள், விமானங்களில் இருந்து இறங்கி, இந்த ப்ரீபெய்ட் டாக்ஸி கவுண்டர்களை தேடி கண்டுபிடித்து, பதிவு செய்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிலும் ப்ரீபெய்ட் கவுண்டர்கள், உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில், விமான நிலையத்தின் உள்பகுதியில் கவுண்டர் உள்ளது. ஆனால் சர்வதேச முனையத்தில், ப்ரீபெய்ட் டாக்ஸி கவுண்டர்கள், உள்பகுதியில் இல்லாமல், வெளியில் மட்டும் இருப்பதால், பயணிகள் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில், சென்னை விமான நிலைய ப்ரீபெய்ட் டாக்ஸி யூனியன், பயணிகள் வசதிக்காக, ஆன்லைன் புக்கிங் வசதியை புதிதாக தொடங்குகிறது.