சென்னை, ஜூலை 21:
தெற்கு ஓடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, தென்காசி, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதேபோன்று பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்றும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஓரிடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது. மேலும் நாளையும் தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும், இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.