சென்னை, ஜூலை 21:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. கொளத்தூர் கபாலீசுவரர் கலைக்கல்லூரி விழாவில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திடீரென மருத்துவ பரிசோதனை தேவையாகி உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவலில், ஸ்டாலின் அவர்களுக்கு ஏற்பட்ட லேசான தலைசுற்றல் மற்றும் அவ்வப்போது காணப்படும் அறிகுறிகள் காரணமாக அவசரமாக அனுமதி அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளுக்கு நாளை செல்லவும், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் முதலமைச்சர் திட்டமிட்டிருந்தார். ஆனால், மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து அவருக்கு இரண்டு நாள் ஓய்வு அவசியம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் 2 நாட்களுக்கு திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்படவுள்ளன. அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கண்காணித்து வருகின்றன என்றும், இது வழக்கமான உடல் பரிசோதனை மட்டுமே என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.