புதுடெல்லி, ஜூலை 18:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ள ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள், அரசியல் நிலைமை, வரவிருக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, பீகார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தம், இந்தியா-பாகிஸ்தான் விவாதம், பஹல்காம் தாக்குதல், காஷ்மீர் மாநில அந்தஸ்து, பெண்கள் பாதுகாப்பு, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பதை உறுதி செய்தார். சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத், இந்த கூட்டம் அவசியம் எனவும், கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் ஆம் ஆத்மி பார்ட்டி (AAP) ஆகியவை பங்கேற்பார்களா என உறுதியான தகவல்கள் எதும் வெளியாகவில்லை.
மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற உள்ளது. இடையே ரக்ஷா பந்தன்’ பண்டிகை மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 18-ந் தேதிவரை நாடாளுமன்றத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக உள்ளமைபை வெளிப்படுத்தி, பாராளுமன்றத்தில் தேசிய முக்கிய பிரச்சினைகளை வலியுறுத்தும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.