சென்னை, ஜூலை 17:
உடல் பருமன் மற்றும் அதிக எடை தொடர்பாக இந்தியா எதிர்கொண்டுவரும் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனையடுத்து வெளியான புதிய ஆய்வுகளின்படி, 2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 44.9 கோடிக்கும் அதிகமானோர் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், நகர்ப்புறத்தில் வசிப்பவர்களில் ஏறத்தாழ ஐந்தில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்.
இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணமாக, பலர் அன்றாடம் சாப்பிடும் அதிக எண்ணெய், அதிக சர்க்கரை கொண்ட சிற்றுண்டி உணவுகள், உடற்பயிற்சி பற்றாக்குறை ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்கே உடல் பருமன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை அறிவித்துள்ளது. நாக்பூர் எய்ம்ஸ் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளான சமோசா, ஜிலேபி போன்றவற்றில் உள்ள எண்ணெய் மற்றும் சர்க்கரையின் அளவை வெளிப்படையாகக் காட்டும் பதிவு பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் நாக்பூர் இந்திய இருதயவியல் சங்கம் தெரிவித்ததாவது, “சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பதை போல் விரைவில் சமோசா, ஜிலேபி ஆகியவற்றை பட்டறைகளிலும், பாக்கெட் லேபிள் அடிப்படையிலும் ‘உடலுக்கு தீங்கு விளைவிக்கும்’ என்ற எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்,” என கூறப்பட்டுள்ளது.
இது, நீரிழிவு, இதயநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தடுக்க துவக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இனி, நாட்டில் பல பிரபலமான சிற்றுண்டிகள் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரும் என்பதை சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.