‘உங்களுக்கு நல்ல சாவே வராது’..திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு சாபம் விட்ட ஆர்.எஸ் பாரதி

சென்னை காரம்பாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் புகழ்வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.

திமுக தொண்டர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுரை

கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சூழலில் தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது என்று வலியுறுத்தினார். கருணாநிதி பல ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் பெற்ற வெற்றிகளையும், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணத்தையும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் முக்கியமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவராக உருவெடுத்து வருவதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இதனால் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சாபம் விட்ட ஆர்.எஸ்.பாரதி

திமுகவுக்கு பதிலாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்த மக்களையும் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்தார். ஆலந்தூர் மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளில் திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு பணிகளை அவர் எடுத்துரைத்தார். அந்தப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளால் பொதுமக்கள் பயன்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

அந்த மருத்துவ வசதிகளை பயன்படுத்தும் மக்களில் சிலர் தவெகவுக்கு வாக்களித்ததாக கூறி “அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது” என அவர் பேசியுள்ளார்.

இனி மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம்

மக்கள் தற்போது தண்ணீர் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக புகார் தெரிவிப்பதாக கூறிய அவர், திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இனிமேல் மக்களுக்காக பணியாற்ற வேண்டாம் என்றும், கட்சியினருக்காக பணியாற்றி அடுத்த 5 ஆண்டுகளை எதிர்கொள்ளலாம் என பேசியுள்ளார்.

Related Post

Latest News