சென்னை, ஜூலை 10:
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1996 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இதில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ் பாடத்திற்கு 216 பேர், ஆங்கிலம்-197, கணிதம்-232, இயற்பியல்-233, வேதியியல்-217, தாவரவியல்-147, விலங்கியல்-131, வணிகவியல்-198, பொருளியல்-169, வரலாறு-68, புவியியல்-15, அரசியல் அறிவியல்-14, கணினி பயிற்றுனர் நிலை 1-57, உடற்கல்வி இயக்குனர் நிலை 1-102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.செப்டம்பர் மாதம் 28-ந்தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விண்ணப்பங்களில் உள்ள குறைகளை களைவதற்கு ஆகஸ்டு 13-ம் தேதி முதல் 16-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் tnbgrievanee@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.