சென்னை, ஜூலை 4:
2025-ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 2021-ஆம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, ஆசிரியர் கி. வீரமணி, முனைவர் குமரி அனந்தன் ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர். அதன் படி 2025-ஆம் ஆண்டுக்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில், மூத்த அரசியல் தலைவரும், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும், சமூக நல்லிணக்கம் மற்றும் அரசியல் அறிவு கொண்ட பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனை பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டிற்கான தகைசால் விருதுக்கு அவரை பரிந்துரை செய்து, அவருக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் இவர் கோவையில் 2010-ல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டிற்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கியவர். வாழும் நெறி, குர்ஆனின் குரல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர். மேலும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் வரலாற்றுத் துறை பேராசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றியவரும் ஆவார்.
தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கு ரூ.10 லட்சம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளாதாகவும் கூறப்பட்டுள்ளது.