சிவகங்கை, ஏப்ரல் 08:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீட் தேர்வு வேண்டாம் என்ற கருத்து பரவலாக உள்ளது. இதற்கு மற்ற மாநிலங்களும் குரல் கொடுக்க வேண்டும். மத்தியில் பா.ஜனதா அரசு இருக்கும் வரை நீட் விலக்கு சாத்தியமில்லை. ஆரம்பத்தில், அந்தந்த மாநிலங்கள் நீட் வேண்டும் அல்லது வேண்டாம் என்று தீர்மானிக்கலாம் என்ற நிலை இருந்தது. அதை மாற்றியது பா.ஜனதா அரசு.
நான் சீமானை வெளியூர் வேட்பாளர் என்று கூறும்போது, உள்ளூரில் நல்ல வேட்பாளர் இருக்கிறார் என்ற வாதத்தை முன்வைக்கிறேன். அந்த வாதத்தை அந்த ஊரிலேயே வலுப்படுத்த சொல்லுங்கள்.
சீமான் 2016-ம் ஆண்டு கடலூரில் போட்டியிட்டார். 2021-ம் ஆண்டு திருவெற்றியூரில் போட்டியிட்டார். தற்போது காரைக்கு டியில் நிற்கிறார். 2031-ம் ஆண்டு எந்த ஊரில் போட்டியிடுவார் என்பது தெரியவில்லை.
உள்ளூரில் நாங்கள் நல்ல வேட்பாளரை வைத்துள்ளோம் என்பதே எங்கள் வாதம். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். ஊருடன் தொடர்பு கொண்டவர்கள், தேர்தலுக்கு அப்பாற்பட்ட காலத்திலும் மக்களுடன் தொடர்பில் இருப்பார்கள். சீமானுக்கு காரைக்குடியுடன் தொடர்பு இல்லை என்பதையே நான் வலியுறுத்துகிறேன். அரசியலில் நகைச்சுவையும் அதிகமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

