சென்னை, ஏப்ரல் 04:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் யார்? என்பதை அறிவிப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் 27 பேர் கொண்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன்படி சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன், அவிநாசியில் எல்.முருகன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சியில் கிருத்திகா சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர் பட்டியலில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், பா.ஜ.க. மேலிடம் அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியதாகவும், ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் கேட்ட தொகுதி கிடைக்காததால், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அண்ணாமலை கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் நேற்று வெளியான பா.ஜ.க.வேட்பாளர் பட்டியலில் ஏன் பெயர் இல்லை..? என்று அண்ணாமலையிடம் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், “தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தலைமைக்கு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக தெரிவித்துவிட்டேன். மாநிலத்தின் கோர் கமிட்டியில் என்னுடைய கருத்தை இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லி இருந்தேன். கோர் கமிட்டியில் இருந்து தலைமைக்கு போன பட்டியலில் என் பெயர் கிடையாது. பியூஷ் கோயலிடமும் ஒரு வாரத்திற்கு முன்பு தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கருத்தை தெரிவித்து இருந்தேன். கட்சி என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து, என்னை பிரசாரத்திற்கு பயன்படுத்தி இருப்பது மகிழ்ச்சி தான்.
காரணம் இந்த தேர்தலை பொறுத்தவரை எல்லோருக்கும் பணி செய்கிறேன். தமிழகம் முழுவதும் பா.ஜ.க. வேட்பாளர்கள் 27 பேர் உள்ளனர். தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் எல்லோருக்கும் நான் பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு ஊராக சென்று பிரசாரம் செய்கிறேன். கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது என்னுடைய கடமையாக பார்க்கிறேன். எப்போதும் நான் வேட்பாளர் ரேசில் இல்லை.
எந்த தொகுதியையும் நான் கேட்கவில்லை. போட்டி போடவில்லை. நான் கேட்கவும் மாட்டேன். அது என்னுடைய பழக்கமும் கிடையாது. என்னுடைய வேலை ஏப்ரல் 21ம் தேதி வரை பிரசாரம் செய்வது, அதன் பிறகு மற்றவை குறித்து பேசுகிறேன். இந்த முறை என்னுடைய சண்டை தமிழகம் முழுவதும் பிரசாரம் மூலம் தான். 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்ட போது, எனக்கு சிறிய வருத்தம் இருந்தது. நம்மை நம்பி நிறைய வேட்பாளர்களை போட்டி போட வைத்தோம். ஆனால் என்னால் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடியவில்லை. அந்த மன குறையை 2026ம் ஆண்டு தேர்தலில் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

