திருச்சி, ஏப்ரல் 01:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன்படி கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு புறப்பட்டு செல்கிறார். கரூரில் இன்று மாலை ராயனூர் பகுதியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் தலைமையில் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

