கமிஷனுக்காகத்தான் தி.மு.க “இல்லத்தரசி திட்டம்”-ஐ அறிவித்துள்ளது- ஈ.பி.எஸ்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அந்த வகையில் நெல்லை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டவுன் வாகையடி முனையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்களுக்காக ஆட்சி செய்த அரசு, மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. இது முழுக்க முழுக்க மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க தொடங்கப்பட்டது.

தி.மு.க என்றால் கருணாநிதி குடும்பம், குடும்பம் என்றால் தி.மு.க., அது கட்சியல்ல. கார்ப்பரேட் கம்பெனி. அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தான் ஆட்சியில் வரமுடியும். ஆனால் அ.தி.மு.க. அப்படியல்ல, சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர் ஆக முடியும்.

தி.மு.க.வினருக்கு அப்படி சொல்வதற்கு “தில்” இருக்கிறதா? உழைப்பவர்களுக்கு தி.மு.க.வில் மரியாதை இல்லை. அ.தி.மு.க.வில் தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் உயர்ந்த பதவி கிடைக்கும் அதுக்கு நானே உதாரணம்.

கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் தான் தி.மு.க.வின் தாரக மந்திரம். உங்கள் கூட்டணி கட்சியினர் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை பற்றி வாய் திறப்பதே இல்லை. முட்டுக் கொடுத்தார்கள். இப்போது தி.மு.க. அரசில் நடைபெற்ற ஊழலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பேட்டி கொடுக்கிறார்கள்.

நெல்லை மாநகராட்சியில் பங்கு பிரிப்பதில் கவுன்சிலருக்கும், மேயருக்கும் சண்டை. மேயர் வந்தால் கவுன்சிலர் வருவதில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இவற்றை எல்லாம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை படுஜோராக நடக்கிறது.

மக்கள் எவ்வளோ போராடி பார்த்தார்கள். ஆனால், அரசு அதிகாரிகள் துணையுடன் தென்காசி, நெல்லையில் தான் அதிகம் கொள்ளை நடக்கிறது. இதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுவரை குற்றவாளியை கண்டு பிடிக்க முடியவில்லை. மக்கள் துன்பத்தில் இருக்கிறார்கள். இந்த கொடுங்கோல் ஆட்சியை அகற்ற மக்கள் துணை நிற்க வேண்டும்.

அ.தி.மு.க. குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும், நேரடியாக பணமாக வழங்குவோம் என்று அறிவித்தோம். இப்போது ஸ்டாலின் 8 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கூப்பன் கொடுக்கிறேன், நீங்கள் போய் பொருட்கள் வாங்கலாம் என்கிறார். அதுக்கு கமிஷன். அதற்குத்தான் இந்த திட்டம். இந்த பிராண்டில் தான் வாங்க வேண்டும் என்பார்கள்.

டோக்கன் யார் கொடுப்பது? தி.மு.க. காரர்கள் தான் கொடுப்பார்கள். அதுவும் கமிஷன் வாங்கிட்டுத்தான் கொடுப்பார்கள். நாங்க அப்படியல்ல அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக 10 ஆயிரம் ரூபாய் போய் சேரும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வர துணை நிற்க வேண்டும் என்று அவர் பேசினார்.

RELATED NEWS

Latest News