டெல்லி, பிப்ரவரி 25:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.
அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். எனவே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.
இதுபோன்ற அறிவிப்புகளை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும். இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக்கூறுகளை ஆராய நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களை கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் தற்போது மனுவை ஏற்க முடியாது. தேர்தலை காரணம் காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு வழக்கை விசாரிக்கலாம். அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை என்று கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.