சென்னை, பிப்ரவரி 25:
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி திடீரென நல்லகண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பினார்.
பின்னர், மீண்டும் சில மாதங்களுக்கு பின்னர் நல்லகண்ணுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனையின் டீன் கூறினார். இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் சிறிது மாதங்களுக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். அவ்வப்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நல்லக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
வயது மூப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நல்லக்கண்ணுவின் உயிர் பிற்பகல் 1.55-க்கு உயிர் பிரிந்தது. நல்லக்கணுவை இழந்துவாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லகண்ணுவின் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.