சென்னை, பிப்ரவரி 21:
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நடைமேடை 10 மற்றும் 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் அனைத்தும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன. நேற்று முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை (45 நாட்கள்) இந்த மாற்றம் அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் 6-வது நடைமேடையில் இருந்தும். மறுமார்க்கமாக வரும் ரயில்கள் 5-வது நடை மேடையில் இருந்தும் இயக்கப்பட்டன. இதற்காக தற்காலிக கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
சுமார் 40 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார ரயில்கள், 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன. இதில் கொடுமையாக, எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள், சேத்துப்பட்டு கிராசிங்கில் உள்ள ஒரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் நின்று, ஒரு ரயில் வந்த பின்னரே எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரயில் அந்த வழித்தடத்தில் செல்ல முடிந்தது.
இதனால், பல்வேறு மின்சார ரயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வேலை மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் நகரவே இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மற்றும் செய்வதறியாது திகைத்த பயணிகள், ரயில் பழுதாகிவிட்டதோ என்ற அச்சத்தில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் இறங்கி நடக்க தொடங்கினர். மேலும், எப்போது தான் ரயில் வருமோ என ரயில் நிலையங்களிலும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
பராமரிப்பு பணியின் முதல் நாளிலேயே சென்னை மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். “இன்னும் 44 நாட்களை எப்படி கடக்கப்போகிறோம்?” என்று பயணிகள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். முதல் நாளிலே அலைக்கழிக்கப்பட்ட பயணிகள் உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர். ரயில்வே நிர்வாகம் இந்த குளறுபடிகளை உடனடியாக சரிசெய்து, இனியாவது ரயில்களை உரிய நேரத்தில் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில், சென்னையில் 2-வது நாளாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றை போலவே இன்றும் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டில் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களும் எழும்பூர் நடைமேடை சிக்னலுக்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வேலைக்கு செல்வபவர்கள், பள்ளி – கல்லூரி மாணவர்கள், ஊருக்கு சென்று மீண்டும் சென்னைக்கு திரும்புபவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னையில் புறநகர் சேவை இரண்டாவது நாளும் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்