கோவை, பிப்ரவரி 05:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தோல்வி பயம் காரணமாகவே தவெகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்று தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்த ஈபிஎஸ், “விஜய்க்கு ஒன்றும் தெரியாது. அவர் முதலில் செய்தியாளர்களைச் சந்திக்கட்டும்” என கருத்து தெரிவித்திருந்தார். இந்த சூழலில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஈபிஎஸ் கருத்துகளுக்கு கடுமையான பதிலை அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தோல்வி பயம் ஏற்பட்டால் மட்டுமே இதுபோன்ற கருத்துகளை அவர்கள் பரிமாறிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுகவின் ‘பி’ டீமாக யார் செயல்படுகிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவரைப் போல நானும் தேவையற்ற கருத்துகளைச் சொல்ல விரும்பவில்லை. அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்” என்றார்.
மேலும், “தோல்வி பயம் ஏற்பட்டதால்தான் ஈபிஎஸ் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார். தேர்தல் அறிக்கை முழுமையாக ஒரே நேரத்தில் வெளியிடப்பட வேண்டும். ஆனால், தினந்தோறும் யோசித்து யோசித்து தேர்தல் அறிக்கை வெளியிடும் நிலையே, அவர்கள் எவ்வளவு பெரிய தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது” என செங்கோட்டையன் தெரிவித்தார்.