மயிலாடுதுறை, ஜனவரி 03:
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்து, கைது செய்ததுடன், அவர்களின் 2 நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவதும், அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை மீனவ அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.