அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டு: பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த அரசு உத்தரவு

Tamil Nadu cabinet meeting on February 5th!

சென்னை, நவம்பர் 25:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 76-வது ஆண்டை எட்டியுள்ளது. இதையொட்டி, தமிழ்நாட்டின் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்துமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம் உருவானது ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மாணவர்களிடையே அரசியலமைப்பின் முக்கியத்துவம், அதன் மதிப்பீடுகள், குடிமக்களின் கடமைகள் மற்றும் உரிமைகள் குறித்த புரிதலை வளர்க்கும் நோக்கத்துடன் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கல்வி நிறுவனங்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை (Preamble) வாசிக்கும் நிகழ்ச்சி நாளை சிறப்பாக நடைபெற உள்ளது. அதேபோல், கட்டுரை எழுதுதல், வாதப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன.

மாணவர்கள் அரசியலமைப்பின் அடிப்படை ஆவணங்களைப் புரிந்து, ஜனநாயக மதிப்புகளை காக்கும் உணர்வுடன் வளர வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். கல்வித்துறை இதற்கான வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.

தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றிப் பாதுகாத்து, சமூகநீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனிற்காக அயராது பாடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் பொதுநலத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் ஆகும். கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்குட்பட்டு, மாநில சுயாட்சியே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். தமிழ்நாடு அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிவகைகளை உருவாக்க மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 15(3)-வது பிரிவின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்தமையால், தனது செயல்பாடுகளில், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் அவற்றை செயல்படுத்தி, அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2025 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்டுபாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள்/ கருத்தரங்குகள்/ வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை